<<முந்திய பக்கம்

சங்க இலக்கியம் - அருஞ்சொற்களஞ்சியம்
கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
நூ - முதல் சொற்கள்
நூக்கு
நூபுரம்
நூல்
நூலேணி
நூலோர்
நூழில்
நூழிலாட்டு
நூழை
நூற்றுவர்
நூறு
நூறை
இடப்பக்கமுள்ள சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    நூக்கு - (வி) 1. தள்ளு, push,thrust aside
                 2. முறி, cut down
1.
எடுத்த வேய் எக்கி நூக்கு உயர்பு தாக்க
தொடுத்த தேன் சோரும் வரை போலும் தோற்றம் - பரி 16/45,46
காற்றால் எடுக்கப்பெற்ற மூங்கில் மேலே கிளர்ந்து, அக்காற்றின் தள்ளுதலால் உயர்ந்து தாக்குதலால்
தேன் சோர்ந்து விழும் வரையை ஒக்கும் தோற்றம்
2.
ஊழ் ஆரத்து ஓய் கரை நூக்கி புனல் தந்த
காழ் ஆரத்து அம் புகை சுற்றிய தார் மார்பில் - பரி 9/27,28
சந்தன மரங்களையுடைய ஊழால் மெலிந்த கரையை முறித்து வையைப்புனல் கொண்டுவந்த
வயிரம்பாய்ந்த சந்தனத்தினது புகை சூழ்ந்த மாலையையுடைய மார்பில்

 மேல்
 
    நூபுரம் - (பெ) சிலம்பு, கிண்கிணி, tinkling anklet
திருந்து அடி நூபுரம் ஆர்ப்ப இயலி- கலி 83/16
தமது திருத்தமான காலடிகளில் சிலம்புகள் ஆரவாரிக்க, ஓடிவந்து

 மேல்
 
    நூல் - 1. (வி) (பஞ்சை) இழையாக்கு, make yarn from cotton, spin
           2. (பெ) 1. பஞ்சு இழை, yarn, thread
                2. பூணூல், sacred thread 
                3. ஆகமங்கள், சாத்திரங்கள், agama, Systematic treatise
                4. இசை, கட்டிடக்கலை ஆகியன பற்றிய புத்தகங்கள், treatise on music, architecture etc.,
1.
நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்று அன்ன
வயலை - ஐங் 211/1,2
நெய்யுடன் கலந்து பிசைந்த உழுந்தின் மாவைக் கம்பியாக நூற்றால் போன்ற
வயலைக் கொடிகள்
2.1.
நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்ப - குறு 104/2
நூலினின்றும் அறுபட்ட முத்துக்களைப் போல குளிர்ந்த துளிகள் உதிர
2.2.
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப - பரி 11/79
முப்புரியாக பூணுலை அணிந்த அந்தணர் பொன்னாலான கலன்களை ஏந்தி நிற்க
2.3.
மாலை மார்ப நூல் அறி புலவ - திரு 261
மாலை அணிந்த மார்பினனே, வேதாகமங்கள் முதலிய பல சாத்திரங்களையும் ஓதாது உணர்த்தும் பண்டிதனே
2.4.
கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக
நூல் நெறி மரபின் பண்ணி - சிறு 230,231
சுதிசேர்த்தல் கொண்ட இனிய யாழை, (பாலை யாழின்)குரலையே(செம்பாலையை) குரலாகக் கொண்டு
இசைநூல் கூறுகின்ற முறையால் இயக்கி

நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி - நெடு 76,77
(கட்டிடக்கலை)நூலை அறிந்த கலைஞர் மிகச்சரியாக நூலை நேரே பிடித்து,
திசைகளைக் குறித்துக்கொண்டு, தெய்வங்களை (ஏறிட்டுப்)பார்த்து(த் தொழுது),

நூல் அமை பிறப்பின் நீல உத்தி - அகம் 400/5
புரவி நூல் கூறும் இலக்கணம் அமைந்த பிறப்பினையும், நீலமணியாகிய நெற்றிச்சுட்டியினையும்

 மேல்
 
    நூலேணி - (பெ) நூல்கயிற்றால் அமைந்த ஏணி., Ladder made of threads;
மெல் நூல்_ஏணி பன் மாண் சுற்றினர் - மது 640
மெல்லிய நூலாற் செய்த ஏணியை (இடுப்பைச்சுற்றிப்)பல முறை சுற்றிய சுற்றினையுடையவராய்

 மேல்
 
    நூலோர் - (பெ) பலநூல்களைக் கற்றுத்தேறியவர்கள், those who have learnt treatises on many subjects
நூலோர் புகழ்ந்த மாட்சிய மால் கடல்
வளை கண்டு அன்ன வால் உளை புரவி - பெரும் 487,488
(குதிரை இலக்கண)நூல்கற்றோர் புகழ்ந்த மாண்புடையனவாய், திருமாலின் பாற்கடலில்
சங்கைக் கண்டாற் போன்ற வெண்மையான தலையிறகுகளை உடைய குதிரைகள்,

 மேல்
 
    நூழில் - (பெ) கொன்றுகுவித்தல், slaughter, massacre
நூழிலும் இழுக்கும் ஊழ் அடி முட்டமும்
பழுவும் பாந்தளும் உளப்பட பிறவும்
வழுவின் வழாஅ விழுமம் அவர்
குழு மலை விடரகம் உடையவால் எனவே - குறி 258-261
(வழிப்பறி செய்வோர்)கொன்று குவிக்கும் இடங்களும், வழுக்கு நிலமும், புழங்கின தடங்களுள்ள முட்டுப்பாதைகளும்
பேயும், மலைப்பாம்பும், (இவற்றை)உள்ளிட்ட பிறவும்,						
(நாம் சிறிது)தவறினாலும் (அவை உடனே கொல்லத்)தவறாத இடர்ப்பாடுகளை -- (அவரின்
கூட்டமான மலைகளில் உள்ள பிளவுகள் உள்ள இடம்) -- உடையன' என்றாள் தோழி

 மேல்
 
    நூழிலாட்டு - 1. (வி) கொன்றுகுவி, slay in heaps
                 2. (பெ) கொன்று குவித்தல், killing in heaps
1.
இகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம்
நுகம் பட கடந்து நூழிலாட்டி
புரை தோல் வரைப்பின் வேல் நிழல் புலவோர்க்கு - மலை 87,88
வெகுதூரத்தில் உள்ளனவாயினும், பகைவர் நாட்டின்
(வண்டிக்கு நுகத்தடி போன்ற)முன்னணிப்படை வீழுமாறு மேற்சென்று (படையினரைக்)கொன்று குவித்து,
சிறந்த கேடகங்களைக்கொண்ட கோட்டைமதிலில் இருக்கும் வேல் படையின் பாதுகாப்பில் இருக்கும் அறிஞர்க்கு
2.
வள்ளை நீக்கி வய மீன் முகந்து
கொள்ளை சாற்றிய கொடு முடி வலைஞர்
வேழ பழனத்து நூழிலாட்டு - மது 255-257
வள்ளைக்கொடிகளை ஒதுக்கிவிட்டு வலிமையுடைய மீன்களை முகந்துகொண்டு,		255
(தாம்)கொண்டவற்றைக் கூவிவிற்கும் கொடிய முடிச்சுக்களையுடைய வலைகளையுடையோர்,
கொறுக்கைச்சிப் புல்லையுடைய வயல்மீன்களைக் கொன்றுகுவிக்கும் ஓசையும்

 மேல்
 
    நூழை - (பெ) சிறுவாயில், துவாரம், Postern, hole
எய்ம் முள் அன்ன பரூஉ மயிர் எருத்தின்
செய்ம்ம் மேவல் சிறு கண் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில் - நற் 98/1-4
முள்ளம்பன்றியின் முள்ளைப்போன்ற பருத்த மயிருள்ள பிடரியைக் கொண்ட,
வயலில் மேயும் விருப்பமுள்ள, சிறிய கண்கள் உள்ள, பன்றியானது,
உயர்ந்த மலையிலுள்ள அகன்ற கொல்லையில் சென்று மேயும்பொருட்டு, விலங்குகளைப் பிடிக்கும் பெரிய பொறியின்
சிறிய வாசலில் நுழையும் பொழுதில்

 மேல்
 
    நூற்றுவர் - (பெ) கௌரவர்கள், kaurava princes
மறம் தலைக்கொண்ட நூற்றுவர்_தலைவனை - கலி 52/2
அறத்தை விட்டு மறத்தை மேற்கொண்ட நூற்றுவர் தலைவனான துரியோதனனின்

 மேல்
 
    நூறு - 1. (வி) 1. அழி, destroy, kill
                  2. வெட்டு, cut down, butcher
                  3. (மார்பில்)அடித்துக்கொள், strike, beat (as one's breast) 
           2. (பெ) 1. நூறு என்னும் எண், hundred
                  2. நீறு, சுண்ணாம்புப்பொடி, lime powder
1.1
அம்பு உடை கையர் அரண் பல நூறி - அகம் 69/16
அம்பினையுடைய கையினராய் பகைவர் அரண்கள் பலவற்றை அழித்து
1.2
வேல் கோல் ஆக ஆள் செல நூறி - மது 690
வேலினை (ஆனோட்டும்)கோலாகக்கொண்டு வீரரை மாள வெட்டி
1.3
முலை பொலி ஆகம் உருப்ப நூறி
மெய்ம்மறந்து பட்ட வரையா பூசல்
ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர - புறம் 25/10-12
முலை பொலிந்த மார்பகம் அழல்பட அறைந்துகொண்டு
அறிவு மயங்கி உற்ற அளவற்ற அழுகை ஆரவாரத்தையுடைய
ஒளிரும் நெற்றியையுடைய மகளிர் கைம்மை நோன்பிலே மிக
2.1
காய் நெல் அறுத்து கவளம் கொளினே
மா நிறைவு இல்லதும் பன் நாட்கு ஆகும்
நூறு செறு ஆயினும் தமித்து புக்கு உணினே
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும் - புறம் 184/1-4
காய்த்த நெல்லை அறுத்துக் கவளமாகக் கொடுத்தால்
ஒரு மாவுக்குக் குறைந்த நிலத்தின் கதிரும் பல நாளைக்கு ஆகும்
நூறு செய் ஆயினும் யானை தனித்துப் புகுந்து உண்ணுமாயின்
அதன் வாயினுள்புகுந்த நெல்லைக் காட்டிலும் கால் மிகவும்கெடுக்கும்.
2.2
நீடு கொடி இலையினர் கோடு சுடு நூற்றினர் - மது 401
நீண்ட கொடி(யில் விளையும்) வெற்றிலையை உடையவரும், சங்கு சுட்டு(ப் பொடித்த) சுண்ணாம்பையுடையவரும்,

 மேல்
 
    நூறை - (பெ) ஒரு கிழங்கு, a root vegetable,  Fiji yam, Dioscorea pentaphylla
காஅய் கொண்ட நுகம் மருள் நூறை - மலை 515
தோளில் சுமந்துவந்த, நுகத்தடியோ என நினைக்கத்தோன்றும் நூறைக்கிழங்கும்

	

 மேல்